Monday, March 10, 2014

சுதர்ஷன கிரியா பற்றி குருஜி - (தமிழாக்கம்)

சுதர்ஷன கிரியா முடிவில், நமக்கு சில துளி நிமிடங்கள் சமாதி நிலையின் அனுபவம்  கிட்டும்.

இதை சில நேரம் நாம் அறிய இயலும், சில நேரம் அறிய இயலாதிருக்கக்கூடும்.

இத்தருணத்தில் தான் நம் மனதில் பதிந்திருக்கும் முன்வினைப் பயன் (karmas), மற்றும், மறைந்திருக்கிற பதிவுகள் (latent impressions) அகறுகின்றது/அழிகின்றது/அழிக்கபடுகின்றது.

- ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.

Sunday, December 30, 2012

எதிர்மறையான எண்ணங்களின் விதை.. குழப்பம் விழைவிக்க கூடிய தன்மை ...!!!

நம்மிடம் உள்ள எதிர்மறையான எண்ணங்களின் விதை - மற்றும் -  குழப்பம் விழைவிக்க கூடிய தன்மை - ஆகியவற்றை முற்றிலுமாக வேரறுக்க  அன்றாட சாதனைகள் (பயிற்சிகள்) உதவும்.

Thursday, August 2, 2012

சுதர்சன கிரியா-வை ஏன் நான் தினமும் செய்ய வேண்டும்...???

(சுதர்சனகிரியா என்பது வாழும்கலை பயிற்சியில் கற்றுத்தரப்படும் ஒரு உன்னதமான மூச்சு பயிற்சி.)

இந்த கேள்வி என்னிடம் மட்டுமல்ல எல்லோரிடமும் தோன்றக்கூடிய கேள்வி...சமீபத்தில் ஒரு மூத்த வாழும் கலை ஆசிரியர் நம் மையத்திற்கு (Santa Clara!) வருகை புரிந்தார். அவரிடம் கலந்துரையாடிக்கொண்டிருக்கும் பொழுது... விளையாட்டாக இந்த கேள்வியை கேட்டேன்...??

குருஜி-யின் யோகா சூத்திர விளக்கத்தை அவர் எம்மிடம் விவரித்தார்...


மூச்சு காற்றில் - பிராண சக்தி இருப்பது எல்லாரும் அறிந்த விஷயம். ஆனால் அது எப்படி செயல்படுகிறது எனபது ஒரு ஆச்சர்யமான விஷயம்.

பிராண சக்தியை ஐந்து முக்கிய  பிரிவுகளாகவும் , ஐந்து துணை பிரிவுகளாகவும் பிரிக்கப்படுகின்றது...

ஐந்து முக்கிய  பிரிவு
---------------------------------------------------
௧.  பிராணா - நம் உள்ளே செல்ல கூடிய காற்று. உள்சென்று ரத்த ஓட்டத்தில் கலந்து ஒவ்வொரு அணுவிற்கும் சென்று அடையக்கூடியது. நம் மூச்சு காற்றாகவும், இதய துடிப்பாகவும் நம்மிடம் உணரப்படுகின்றது.
௨. அபானா - உடலில் இருந்து வெளிவரகூடியது. நம் உடலில் உள்ள நச்சு கழிவை வெளியேற்றகூடியது.
௩. உதானா - நம் உணர்வுகளுடன் சம்பந்தபட்டது. உணர்வுகளின் பொழுது இந்த சக்தி வெளிபடுகின்றது. இது நம் மார்பு/இதய பகுதிகளில் ஏற்படுவதை உணரலாம்.
௪. சமானா - ஜீரணத்திற்கும், ஒவ்வொரு அணுவை புதுப்பிபதற்கும் இந்த சக்தி உதவுகிறது. ஒவ்வொரு மனிதரிடம் ஒளிவட்டம்/ஆரா உண்டாவதற்கு இந்த சக்தி உதவுகிறது. தினமும் தியானம் பயில்பவரிடம் இந்த சக்தி நன்கு செல்யல்படும்.
௫. வியானா - இந்த சக்தி உடல் தசைகள் நன்கு செயல்பட உதவுகிறது. எலும்புகளின் பிணைப்பு இந்த சக்தியின் மூலம் ஏற்படுகின்றது.

ஐந்து துணை பிரிவு
--------------------------------------------------
௧. நாகா - சில சமயங்களில் நம் வயிற்றில் அங்கும் இங்கும் சப்தம் உண்டாக்கி ஏப்பமாக வெளிவரக்கூடிய காற்று
௨. கூர்மா - சமஸ்க்ரிதத்தில் 'ஆமை'-யை கூர்மா என்று அழைப்பர். இந்த சக்தி நிதானமாக வரக்கூடியது. குறிப்பாக நம் முகத்தில் இதை உணரலாம். கண் துடிப்பது. உதடுகள் துடிப்பது, கன்னங்கள் துடிப்பது, நெற்றி துடிப்பது, தசைகள் துடிப்பது... இவைகளுக்கு காரணமே இந்த கூர்ம சக்தி வெளிபடுவது. இந்த சக்தியில் குறைபாடு ஏற்படுவதினால் முடக்கு வாதம்/வாத நோய் ஏற்படுகிறது.
௩. தேவ தத்தா - கொட்டாவி விடல். நம் உடல் தளர்வடயும்போது இது வெளிப்படும்.
௪. க்ரிகலா - தும்மல் ஏற்படுவது.
௫. தனஞ்சயா - இதய வால்வுகள் செல்யல்படுவதற்கு மிக முக்கியமாக உதவக்கூடியது. இதன் குறைபாடு - மாரடைப்பை ஏற்படுத்தும்.

பிரணாயாமா, பாஸ்திரிக்கா, ஓம் உச்சாடனம்  செய்யும் பொழுது... நம் உடல் பக்குவப்படுகின்றது...

சுதர்சன கிரியா செய்யும் பொழுது மட்டுமே  மேற்கூறிய அணைத்து சக்திகளும் - நன்முறையில் தூண்டப்பட்டு சமன்படுத்தப்படுகின்றது.

சுதர்சன கிரியா செய்யும் பொழுது சில சமயம் 
ஏப்பம், உடல் பகுதிகள் துடிப்பது, கொட்டாவி, தும்மல், உடல் தசைகள் இறுகி தளர்வாவது, அழுகை-சிரிப்பு-சோக உணர்வுகள் வெளிபடுவது, பிரகாசமான உணர்வு... போன்ற அனுபவங்கள் அனைத்துமே மேற் கூறிய சக்திகளின் வெளிப்பாடுகளாகும்.

இது எனக்கு கிடைத்த மிக மிக உபயோகமான விஷயம். இதுவே "சுதர்சன கிரியா-வை ஏன் நான் தினமும் செய்ய வேண்டும்...???" என்பதற்கான உன்னதமான பதில்..!!!

குறிப்பு:
 
என்ன நண்பர்களே.... இனி தினமும் பயிற்சி செய்வோமா...???

அப்படி செய்யும் பொழுது... இந்த சக்தி செயல்படுகின்றது அந்த சக்தி செயல்படுகிறது என்று ஆராய்ச்சி செய்யாமல் பயிற்சியை மட்டும் செய்யலாமே :) :)...!!!
ஆராயாமல்... இந்த அற்புதமான விஷயத்தை அனுபவிப்போம்!!!

Friday, April 15, 2011

"குரு பூர்ணிமா"-வின் தத்துவம் என்ன?

குருஜி: ஒரு ஆச்சார்யா(ஆசிரியர்) நமக்கு கல்வி புகட்டுகிறார்... குரு நம்மை மிக உயர்ந்த விழிப்புணர்வு நிலைக்கு உயர்த்தி, உயிர்ப்புடன் வாழ வழிவகை செய்கின்றார். ஆச்சார்யா(ஆசிரியர்) நமக்கு தகவல் பரிமாற்றம் செய்கிறார்... குரு நமக்கு விழிப்புணர்வுடன் கூடிய புத்திசாலிதனத்தை புகட்டுகிறார்.

மனதிற்கும் நிலவிற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. முழு நிலவு முழுமையை குறிக்கும்... பரிபூரணத்தை குறிக்கும், மிக உயரிய குணத்தை குறிக்கும். குரு பூர்ணிமா நாளில் ஒரு பக்தன் தன் முழுமையான நன்றியுணர்வால் மலர்ந்து... அந்த நன்றியுணர்வை வெளிபடுத்தும் நாள். அப்படி அந்த நன்றியுணர்வு வெளிப்படும்போது அந்த பக்தன் "பரந்து-விரிந்த-தன்னுள்-அசைந்தாடும்" ஒரு கடல் போல மாறிவிடுவர்... இத்தருணமே பரிபூரணதுவத்தை வெளிபடுத்தும் நேரம், குறைவில்லாத தன் மகிழ்ச்சியை ஒவ்வொருவரும் கொண்டாடக்கூடிய நேரம்.

இந்த நாளை வியாச பூர்ணிமா என்றும் அழைப்பர்... வியாசர் எல்லாவிதமான விசயங்களின் ஞானத்தை நமக்கு வழங்கியுள்ளார். ஆகையால் குரு பூர்ணிமா நாளன்று எல்லா குருமார்களையும் (கடந்த கால குருமார்களை) நினைவுகூறும் நாள்.

ஒரு பக்தன் தன் பரிபூரணதுவத்தை வெளிப்படுத்தி, தான் அந்த வருடத்தில் எவ்வளவு முன்னேறி இருக்கிறேன், எவ்வளவு நல்ல மாற்றம் தன் வாழ்வில் ஏற்பட்டுள்ளது என்று தன் ஒரு வருட வாழ்க்கையை திரும்பிப்பார்க்கும் நாள். தன் வாழ்கையில் கற்றுக்கொண்ட பாடங்கள்... ஞானத்தில் வளரும் அல்லது வளர்ந்த நிலை... எவ்வளவு ஞானம் தான் பெற்றுள்ளேன் என்பதை ஆய்ந்து அறியும் நாள்.

நம் ஆன்மீக முன்னேற்றத்தை நம் மனதிற்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டி வந்தால் தான்... நாம் நம் நிலையை உணர்ந்துகொள்ள முடியும்... ஆகையால் ஒவ்வொரு குரு பூர்ணிமா நாளன்றும் நாம் அனைவரும் நம்மை ஆய்வு செய்து, அந்த நினைவை நம் மனதிற்கு நினைவுட்டுவது மிக அவசியம்.

Friday, February 11, 2011

குருவே... நீங்கள் யாருடைய ரசிகர்

கேள்வி: என் ஆருயிர் குருவே, இது நாள் வரை யார் மீதும் மதிப்பும், மரியாதையும் வரவில்லை... உங்களை தவிர... நான் உங்களுடைய தீவிர ரசிகனாகிவிட்டேன்? நீங்கள் யாருடைய ரசிகர்?

பதில்: யான் உங்களுடைய ரசிகன்...!!! யான் ரசிகர்களின் ரசிகன்...!!!

Thursday, December 30, 2010

கேள்வி: ஒரு கூற்று உள்ளது... நாராயணனை வணங்கி வந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் (செல்வ-விருத்தி) தானாக கிட்டும்... என்று கூறுவர்... ஏன், லக்ஷ்மியை வணங்க கூடாதோ...?

குருஜி-யின் பதில்: சில பேர் தவறாகபுரிந்துள்ளனர்... இந்த கூற்றை யாம் மாற்றி கூறுகிறோம்... யாம் லக்ஷ்மியை வணங்க சொல்வோம்... இருவரையும் வணங்காமல் மேலோட்டமாக சடங்கு சம்பிரதாயத்திற்காக... பாசாங்கு செய்தால்... ஒரு பயனும் கிட்டாது, ஒன்றும் நடக்காது. இங்கு யாம் கூறுவது என்னவென்றால்...  "உபாசனம்" செய்யுங்கள் (மெய்யுருகி வணங்குங்கள்). அப்படி வணங்கும்போது... உங்களால் "கறை-படிந்த மனதுடனோ" அல்லது "நேர்மையில்லாமலோ" இருக்கமுடியுமா?

          சமஸ்க்ருதத்தில், "எல்லாமே செல்வமாக" நம் முன்னோர்கள் கூறிச்சென்றுள்ளனர்... செல்வம் என்பது பொன் பொருள் காசு பணம் மட்டுமல்ல. "ஆரோக்கியம்" ஒரு வகையான செல்வம்... "வெற்றி" ஒரு வகையான செல்வம்... "தைரியம்" ஒரு வகையான செல்வம்... "அஷ்ட லக்ஷ்மி"-யை வணங்கி வந்தால் பலன் கிட்டும். 

         பொன் பொருள் சேர்பதற்காக மட்டும் நாம் லக்ஷ்மியின் பின்னல் ஓடுகிறோம்... கொஞ்சம் யோசியுங்கள்... மனதார வணங்குங்கள், பிரார்த்தனை செய்யுங்கள்... லக்ஷ்மி கடாக்ஷம் (செல்வ-விருத்தி) தானாக கிட்டும். 

        முட்டாள் தனத்துடன் செயல்பட்டால்... லக்ஷ்மி கடாக்ஷம் (செல்வ-விருத்தி) உங்களை வந்தடையுமா....?

கேள்வி: உடல் சுத்தம் பெற நீர் உதவும்... ஆத்ம சுத்தம் பெற நாம் என்ன செய்யவேண்டும்?

குருஜி-யின் பதில்: "சுதர்சன கிரியா" மிகவும் உதவிகரமாய் இருக்கும்.

கேள்வி: எப்பொழுதும் குற்றம், குறை கூறிக்கொண்டு... எதிர்மறையாக பேசிக்கொண்டிருப்பவர்களை எப்படி கையாள்வது...?

குருஜி-யின் பதில்: முதலில் "எப்பொழுதும்" என்னும் வார்த்தையை விட்டுவிடுங்கள்... எல்லவற்றையும் பொதுப்படையாக கூறுதல்... நீண்ட காலம் ஒன்றுக்கும் உதவாத விசயத்தை எடுத்துச்செல்வது நல்லதல்ல, இதைதான் நாம் செய்துகொண்டிருக்கிறோம்... 


           செல்லும் வழியில் நாம் எடுக்கவேண்டிய திருப்பத்தை தவறவிட்டுவிட்டால்... "ஓ...எப்பொழுதும்" நான் இப்படியே செய்கிறேன்... "எப்பொழுதும்" நான் திருப்பத்தை தவறவிடுகிறேன் என்று கூறிக்கொண்டிருப்பீர்கள்.... தினம்தோறும் நீங்கள்  அப்படித்தான் பாதையை தவற விடுகிறீர்களா...?  இல்லை, இவ்வாறுதான் எப்பொழுதும் நிகழ்கின்றதா...?

           இந்த சிறு எதிர்மறையான குணத்தை எதிர்கொள்ள உங்கள் நேர்மறையான... உன்னதமான... உயர்வான குணம்,  பலவீனமாக உள்ளதா...?

          இந்த சாதாரண எதிர்மறையான... குற்றம், குறை கூறும் குணத்தை உங்கள் உயர்வான நேர்மறையான குணத்தால் தாக்குப்பிடிக்க முடியாத அளவிற்கு பலவீனமாக உள்ளதா...??

கேள்வி: தீவிரவாதமும்... லஞ்சமும்... ஒவ்வொரு நாளும் அதிகரிக்கின்றது... காரணம் என்ன?

குருஜி-யின் பதில்: மக்களிடம், "நாம் ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளோம்" என்ற உணர்வு குறைந்துள்ள காரணத்தினால் தான் இப்படிப்பட்ட சூழ்நிலை வளர்ந்துள்ளது.

Wednesday, December 29, 2010

கேள்வி: நாகரீக வாழ்க்கை கனவு போல உள்ளதென்றால், உண்மையான வாழ்க்கையென்பது என்ன...? கெட்ட கனவு உண்டானால், அதிலிருந்து என்னை விடுவிப்பது எப்படி?

குருஜி-யின் பதில்: முதல் கேள்வியை நீங்களே வைத்துகொள்வது அவசியம், யாமும் அதையே விரும்புகின்றோம். நல்ல கேள்விகளை  யாம் உங்களிடம் இருந்து பிரித்து-எடுத்துக்கொள்வது கிடையாது, உங்களிடமே விட்டுவிடுகிறோம். இம்மாதிரியான கேள்விகள் உங்களை ஆழமாக சிந்திக்கசெய்யும் ஆற்றல் உடையது... உங்களுள், உங்களை, மிக ஆழமாக அழைத்துச்செல்லும் ஆற்றலை உடையது. இந்த கேள்வியை சுற்றியே நன்றாக யோசனை செய்யுங்கள்... ம்ம்ம்...!!!

          இரண்டாவதாக, "எப்படி கெட்ட கனவுகளில் இருந்து வெளிவருவது...?" என்று கேட்டீர்கள். இதற்கான பதில் "விழித்துக்கொள்வது"-தான்...!!!.

          விழித்துக்கொள்ள... மூச்சுபயிற்சி-கள், மற்றும் தியானம் செய்வது அவசியம். அப்படி செய்தால் கெட்ட கனவுகளிலிருந்து விடுபடலாம்.

கேள்வி: பொய் சொல்பவர்களை எப்படி கையாள்வது?

குருஜி-யின் பதில்: அவர்களை புன்னகையுடனும், அரவணைப்புடனும் கையாளவேண்டும். ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்... பொய் சொல்லும் அந்த நபர்... உண்மையை விட... உங்களின் அன்பிலும், உங்களின் ஏற்றுக்கொள்ளும் தன்மையின் மீதும் அதிக மதிப்பு வைத்திருக்கிறார் என்று அர்த்தம். நம்முடைய ஆசிரமத்தில் நம் பக்தர்கள் சிலர் நம்மிடம் பொய் கூறுவர்... அப்படி அவர்கள் கூறும்போது நாம் அவர்களிடம் புன்னகையுடன் அந்த விஷயம் பற்றி விசாரிப்போம், அவர்களும் புன்னகைபர்...!!!

கேள்வி: என்னுடைய கர்மா-வை எப்படி மாற்றியமைப்பது?

குருஜி-யின் பதில்: "அனுபவத்தின்" மூலமாகவும், "ஞானத்தை நம் வாழ்வில் செயல்படுத்துவதின்" மூலமாகவும் நாம் நம் கர்மா-வை மாற்றியமைக்கலாம். எல்லா கர்மா-வையும் நம்மால் மாற்றியமைக்க முடியாது, சில கர்மா-வை கடந்துதான் செல்லவேண்டும், அதனை அனுபவித்தே ஆகவேண்டும்.

கேள்வி: (குழந்தை வளர்ப்பில்) பெற்றோர்கள் எப்படி இருக்க வேண்டும்?

குருஜி-யின் பதில்: பெற்றோராய் இருக்கும்போது உங்களுடைய அறிவு (அல்லது) தெரிந்துகொள்ளும் தன்மை, பல பரிமாணங்களில் மிக வேகமாக வளர்ச்சி அடையும். பலவற்றை மிக வேகமாக, மிக துல்லியமாக புரிந்துகொள்வீர்கள். உங்கள் கவனம் மிகவும் கூர்மையாக இருக்கும், அதிலேயே மூழ்கிவிடுவீர்கள். ஒரு முக்கிய பிரமுகரின் பாதுகாவலன் போல செயல்படுவீர்கள். உங்களை சுற்றி, குழந்தைகளை சுற்றி, நடைபெறும் நிகழ்வுகளிலேயே உங்கள் கவலையெல்லாம் சூழ்ந்திருக்கும். நீங்கள் அமைதியாய் இருக்கும்பொழுது, அந்த அமைதியை குழந்தைகளும் பற்றிக்கொள்வார்கள்.

       சில சமயம் குழந்தைகளும் முதிர்ந்த பெரியவர்கள் போல பேசுவதையும் காணமுடியும்... பத்து வயது குழந்தைகள் கிளிகள் போல இருப்பார்கள்... சூழ்நிலையில் என்ன நிகழ்கிறதோ அதையே மீண்டும் திரும்பக்கூறும் தன்மை உடையவராய் இருப்பார்கள். ஆகையால், பெற்றோர்கள் குழந்தைகள் முன் சண்டையிடுவதை தவிர்க்க வேண்டும். அவர்களுக்கு உதவாத செயல்கள், காரியங்கள், போன்றவற்றை அவர்கள் முன்னால் செய்வதை தவிர்க்கவேண்டும். ஆன்மிகம் பற்றிய உணர்வை அவர்களிடத்தில், பக்குவமாக, சில கதைகள் மூலம், விளையாட்டுக்கள் மூலம் உணரவைக்கவேண்டும். பிறர்க்கு கொடுத்து உதவும் தன்மையை அவர்களிடத்தில் வளர்ப்பது பெற்றோர்களாகிய உங்களின் தலையாய கடமையாகும்.

கேள்வி: இங்கும், அங்கும் அலைபாயும் மனதை எப்படி கையாள்வது?

குருஜி-யின் பதில்: தியானம், யோகப்பயிற்சிகள், பிரணாயாமம் செய்யும்பொழுது அலைபாயும் மனம் அமைதியடையும். இப்பயிற்சிகளை முறையே பயின்றோமானால் நம் மனமானது நம் வயப்படும்... அலைபாயும் தன்மை குறையும்.

கேள்வி: ஞானத்திற்கும் அறிவியலிற்கும் உள்ள வேறுபாடு என்ன?

குருஜி-யின் பதில்: "நான் யார்?" என்பதை உணர்த்த ஞானம் உதவியாய் இருக்கும். "இது என்ன?" என்பதை உணர்த்த அறிவியல் உதவியாய் இருக்கும்.

கேள்வி: ஆக்ரோஷமாய் இருப்பவர்களையும் அறியாமையாய் இருப்பவர்களையும் எப்படி கையாள்வது?

குருஜி-யின் பதில்: ஆக்ரோஷமாய் இருப்பவர்களும் அறியாமையாய் இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஆக்ரோஷமாய் இருப்பவர்களிடம் சவால் விடும்படி நம் செய்கை... பேச்சு... இருக்கவேண்டும். உதாரணமாய் வாழும் கலை பயிற்சி பற்றி அவர்களிடம் கூறும்போது நாம் சுண்டெலி போல போய் சொல்லலாகாது.  "உங்களுக்கெல்லாம் இப்பயிற்சி பயில ஒரு பத்து பதினஞ்சு வருஷம் ஆகும்... இப்போது நீங்க அந்த அளவு புரிஞ்சுக்க முடியுமான்னு தெரியல..." என்று சவால் விட வேண்டும்

Monday, December 27, 2010

கேள்வி: நான் புத்த மதத்தை பின்பற்றுகிறேன்... புத்தர் பயிற்றுவித்தவைகளையும்... நீங்கள் பயிற்றுவித்தவைகளையும் தினமும் கடைபிடித்து, பயிற்சிகளை மேற்கொள்கிறேன்... மிகவும் நன்றாக இருக்கிறது... இவ்வாறு நான் இரு பயிற்சிகளை செய்வதால் ஏதாவது முரண்பாடு ஏற்படுமா...?

குருஜி-யின் பதில்: முரண்பாடுகள் மனதில் உண்டாகக்கூடியது, நீங்கள் இதை பற்றி குழப்பமடைய வேண்டாம். புத்தரின் போதனைக்கும் நம்முடைய போதனைக்கும் மிக்க வேறுபாடு இல்லை. நாம் இங்கு நான்கு விசயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றோம்.

1. மைத்ரி - சகோதரத்துவம் (அல்லது) நட்புரிமை பாராட்டுதல்.
2. கருணா - கருணை (அல்லது) அரவணைக்கும் தன்மை.
3. முதித்தா - மிகப்பெரிய அளவில் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைபவரை கண்டு மகிழ்ச்சி அடைதல்.
4. உபேக்ஷா - நல்வழிபடுதியவர் மீண்டும் தவறான பாதையில் செல்லும்போது அவரை வேறுபடுதிப்பராமல் இருப்பது.

ஆக சகோதரத்துவம் (அல்லது) நட்புரிமை மகிழ்ச்சியுடன் வரக்குடியது. ஒருவர் துன்பத்தில் இருக்கும்போது சகோதரத்துவம் (அல்லது) நட்புரிமை பாராட்ட முடியாது.
நல்வழிபடுதியவர் மீண்டும் தவறான பாதையில் செல்லும்போது அவரை வேறுபடுதிப்பராமல் இருக்கும் தன்மை அவரின் வாழ்வையே மாற்றக்கூடிய மிகப்பெரிய ஆயுதம். அவரை வேறுபடுதிப்பராமல் இருக்கும்போது அவர் கட்டாயமாக மாறிவிடுவார். இவற்றையே தான் புத்தரும், ஏசுநாதரும் அவரவருடைய வகையில் கூறியுள்ளனர்... 

அஸ்தி, பாத்தி, ப்ரீத்தி (Aasti, Bhati, Preeti) - இருப்பு, விழிப்புணர்வு, அன்பு. இவை அனைத்துமே எல்லோருக்கும் சொந்தமானது, இந்த ஞானத்தை உலகமயமாக்குவது இக்காலகட்டத்தின் நம் ஒவ்வொருவருடைய முக்கியத்தேவையாகும்.

கேள்வி: உண்மை என்பது என்ன...? அன்பு என்பது என்ன...?

குருஜி-யின் பதில்: உண்மை என்பது அழிவற்றது... உண்மையை அறிய உண்மையற்றவை பற்றி தெரிதல் அவசியம். மாற்றம் ஏற்படக்குடியவை எல்லாமே உண்மையற்றவை... வாழ்க்கை என்பது உண்மையை பற்றி அறிந்துகொள்வதற்கான தேடல், அதற்காக அவசரப்படவேண்டாம். உண்மையை உணர ஆழ்ந்த தியானம் மிகவும் உதவும்.

அன்பே உண்மையானது. உண்மையும், அன்பும் இருபக்கம் கொண்டுள்ள காசு போல. 

சுருக்கமாக சொன்னால்... "மாறாத ஒன்று" -  உண்மை... "விளக்கமுடியாத ஒன்று" - அன்பு...!!!

கேள்வி: வியாபாரத்தில் நாம் பெற்றுக்கொள்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளோம்.... ஆனால் ஆன்மீகத்தில் கொடுப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளோம்... எப்படி ஒருவர் இந்த இரண்டிலும்... குற்ற உணர்வில்லாமல் சமாளிப்பது...?

குருஜி-யின் பதில்: ஆன்மீகத்திலும் பெற்றுக்கொள்ளும் தன்மை உள்ளது... ஆன்மீகத்தில் மகிழ்ச்சியை பெற்றுக்கொள்கிறோம்... மற்றவர் மகிழ்வதை பார்த்து அந்த மகிழ்ச்சியை நாமும் பெற்றுக்கொள்கிறோம்... ஆக குற்ற உணர்வுக்கு இடம் கொடுக்க வேண்டியதில்லை.

வியாபாரம் புத்தி சம்பந்தப்பட்டது... (அதாவது தலைக்கு வேலை...), கொடுப்பது குறைவு... பெற்றுக்கொள்வது அதிகம்... ஆனால் ஆன்மிகம் மனம் சம்பந்தப்பட்டது (இதயத்துக்கு வேலை...) கொடுப்பது அதிகம்... பெற்றுக்கொள்வது குறைவு...!!!  ஆகையால் ஆன்மீகத்தை வியாபாரம் போலவும்... வியாபாரத்தை ஆன்மிகம் போலவும் செய்தால் கண்டிபாக பாதிப்பு உண்டாகும்.

கேள்வி: இங்கு ஆசிரமத்தில் நிறைய சேவைகளை ஆண்கள் இன்முகத்துடன் செய்கிறார்கள்... இதே போல அவர்கள் வீட்டிலும் செய்ய ஏதாவது செய்யுங்கள்...!!!


குருஜி-யின் பதில்: நீங்கள் அமைதியாய் இருங்கள்... (சிரிப்பு...)... பெண்கள் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்... ஆண்களின் தன்மானத்தை பாதிக்கும்படியான சொற்களை உபயோகப்படுத்துதல் தவறானது... அவன் ஒரு மூடனாக இருந்தாலும் கூட... அவன் தான் இந்த உலகிலேயே மிகப்பெரியவன் என்று அவனுக்கு உணரவைத்தல் வேண்டும்... அதேபோல ஆண்கள் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்... பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.

கேள்வி: ஒரு காரியத்தை நான் செய்யவேண்டுமானால்... நான் எவ்வளவு செய்யவேண்டும்... நீங்கள் எவ்வளவு எனக்காக செய்வீர்கள்...?

குருஜி-யின் பதில்: நீங்கள் நூறு சதவீகிதம் செய்யுங்கள்... நான் நூறு சதவீகிதம் பார்த்துக்கொள்கிறேன்... (சிரிப்பு...)!!!

Monday, December 20, 2010

கேள்வி : குருஜி, ஆன்மீகத்திற்கும்... செழிப்பான வாழ்வு... இரண்டில் எதை தேர்ந்தெடுப்பது..? (I am in crossroads between Spirituality and Prosperity)

குருஜியின் பதில் : ஆன்மீகம் செழிப்பான வாழ்விற்கு எதிரானது அல்ல... அதேபோல் செழிப்பான வாழ்வு ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல... ஆன்மீக உணர்வு இல்லாத செழிப்பான வாழ்வு நம்மை தாழ்வு நிலைக்கு தள்ளிவிடும்...

பல மனிதர்கள், நிறுவனங்கள் நன்னெறிகள் இல்லாமல் செழிப்பை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்கியவர்கள் தாழ்வு நிலையை அடைந்ததை கண்கூடாக நாம் கண்டுள்ளோம்... ஆக ஆன்மீகம் கலந்த செழிப்பான வாழ்வு மேன்மையுடையது. செழிப்பு என்பது பொன் பொருள் மட்டுமல்ல... நன்னெறிகளும் தான்...!!!

கேள்வி : ஒரு நல்ல வாழும் கலை ஆசிரியரின் அடையாளங்கள் என்ன...?

குருஜியின் பதில் : ஒரு நல்ல ஆசிரியரின் அடையாளங்கள்.... (Humility) பணிவு, (Integrity) முழுமை/நேர்மை/வாய்மை, (Compassion)அரவணைக்கும் தன்மை... இம்மூன்று குணங்கள் இருத்தல் அவசியம்

இந்த குணங்கள் ஆசிரியருக்கு மட்டுமல்ல... ஒவ்வொரு மனிதனிடமும் இருத்தல் அவசியம்... இந்த குணங்கள் எல்ல மனிதர்களிடம் மறைந்துள்ள இயல்பான குணங்கள்... அதை அனைவருக்கும் உணரவைத்தல் அவசியம்... இப்பொழுதுள்ள காலகட்டத்தில் நாம் இதை ஒரு சவாலாக ஏற்று அனைத்து மக்களிடமும் உணர்த்த நாம் பாடுபட வேண்டும்.

வாழும் கலை - தமிழ் ஒளியாக்கம்

வாழும்கலை குறும்படம்.

கேள்வி: நீங்கள் மனதை பற்றி கூறும் பொழுது... மனம், சக்திவடிவானது - உடலையும்தாண்டி செல்லக்கூடியது என்று கூறினீர்கள்... விஞ்ஞான ரீதியாக பார்க்கும்பொழுது சக்திகளின் இணக்கம் ஆக்கபூர்வமாகவோ... அழிவுப்பூர்வமாகவோ இருக்கும். இப்படி இருக்கும்போது ஒருவருடைய மனது எப்படி அடுத்தவரின் மனதை பாதிக்கும் அல்லது... அடுத்தவரின் மனதில் பாதிப்பை உண்டாக்கும்...?

குருஜி-யின் பதில்: ஒருவருடைய மனதின் சக்தி கண்டிப்பாக அடுத்தவரிடம் ஒருவிதமான தாக்கத்தை உண்டாக்கும்... நம்முடைய உணர்வுகள் நம் எண்ணத்தைவிட வலிமையானது... இதை நாம் கண்கூடாக சிறு குழந்தைகளிடம் காணலாம்... சிறுவர்களில் ஒரு குழந்தை அழதுவங்கினால் மற்ற குழந்தைகளும் அழ ஆரம்பித்துவிடும்... அதைப்போல ஒரு குழந்தை விஷமம் செய்ய ஆரம்பித்தால் மற்ற குழந்தைகளும் அதை செய்ய ஆரம்பித்துவிடும்... இந்த அனுபவங்களை அந்தக்குழந்தைகளை பார்த்துக்கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு மிக நன்றாக புரியும்.

இதைப்போலவே, ஒருவரை நோக்கி ஒருவர் காழ்ப்புணர்ச்சியை காட்டிக்கொண்ட இடத்தில்... அல்லது ஒருவரை ஒருவர் திட்டிகொண்ட இடத்தில... அல்லது கோபமாக சண்டை போட்டு கொண்ட இடத்தில்... மற்ற நபர்கள் வந்தால் அந்த உணர்வுகளை அவர்கள் எளிதாக உணரமுடியும்... எந்த ஒரு காரணமும் இல்லாமல் முன்பு இருந்தவர்களின் உணர்வின் தாக்கத்தை இவர்களிடம் காண முடியும்... எந்த ஒரு காரணமும் இல்லாமல் கோபம்... அமைதியின்மை... மன அழுத்தம்... தொற்றிக்கொள்ளும்...!!!

ஆக உயர்வான உணர்வுகளுடன் ஒன்றிணைத்து இருக்கும் பொழுது... அந்த உயர்வான உணர்வுகள் மற்றவரிடமும் பரவி அவரையும் பற்றிக்கொள்ளும், ஆனால்... பார்க்கும்பொழுது நம்முடைய கோபமானது உயர்வான உணர்வைவிட வேகமாக மற்றவரிடம் பரவி... அவரையும் எளிதில் பற்றிக்கொள்ளும்...!!!

கேள்வி: நான் கடவுளை நம்பவேண்டும். அப்படி நான் நம்புவதற்கு அத்தாச்சியாக ஏதாவது அதிசயங்கள் நிகழவேண்டும்... அப்படி ஏதேனும் உள்ளதா அல்லது எனக்காக நடைபெறுமா...?

குருஜி-யின் பதில்: உன்னை சுற்றி இருப்பவைககளை பார்... எல்லாமே அதிசயம்தான்.. ஒரு சிறிய விதை, முளைவிட்டு ஒரு பெரும் மரமாக வளர்கின்றது... இது ஒரு அதிசயமாக தெரியவில்லையா...?

ஒரு முறை யாம் சென்னை சென்றிருந்தபோது ஒரு சிறுவனை அழைத்து வந்திருந்தனர்... அச்சிறுவன் பிறந்தது முதல் செவி கேளாதவன் என்று கூறினர்... யாம் அவனது தலையில் தட்டிக்கொடுதோம்... அச்சிறுவன் தன் வாய்விட்டு ஓசைகள் செய்ய ஆரம்பித்துவிட்டான்...!!! இந்தவிசயம் கேள்விப்பட்டு, மறுநாள் இதேபோல் பாதிக்கப்பட்ட இருபது சிறுவர்களை அழைத்துவந்தனர்...!!!

அதிசயங்கள் இப்பொழுது இயல்பாக உடனடியாக நடக்கின்றது. இது இப்படிதான் நடக்கும்... நடக்கவேண்டும் என்று உறுதியாக சொல்ல இயலாது... நம்மிடம் நல்ல விஷயங்கள் ஆங்காங்கே அமையப்பெற்றால் அதிசயமானது தானாக நடக்கும்.

Friday, December 17, 2010

கேள்வி : தியானம் மனதை அமைதிப்படுத்துகிறது... மிகவும் அருமையாக இருக்கிறது, ஆனால் அன்றாட வாழ்கையில் பல காரியங்களில் இடுபட வேண்டியுள்ளது... அன்றாட வாழ்கையை கோபமில்லாமலும்... பரபரப்பு இல்லாமலும் அமைதியான மனதோடு இயல்பாக வாழ்வது எப்படி?

குருஜி-யின் பதில்: நம் உடலை தூய்மையாக வைத்துக்கொள்ள தினமும் காலையில் குளிக்கின்றோம்... அதன் பின் நம் அன்றாட காரியங்களை கவனிக்கின்றோம்... காலை முதல் குளித்துக்கொண்டே இருப்பது என்ற அவசியம் இல்லை... அதுபோல தியானம் செய்து மனம் அமைதியடைந்தபின் அன்றாட காரியங்களை கவனிக்கலாம். மனதை தொந்தரவு இல்லாமல் வைத்துக்கொள்வதென்பது சுலபமான காரியமில்லை... தொடர்ந்து தினமும் சில மணிநேரம் பயிற்சி மேற்கொண்டால்... எளிமையாக மன அமைதி பெறலாம்.

கேள்வி : ஓம் என்பதன் அர்த்தம் என்ன?

குருஜி-யின் பதில்: படைப்பின் ஒரு அற்புதமான ஒலி "ஓம்"... இதை காலத்தின் ஒலி என்று குறிப்பிடலாம்... காலம் தோன்றும் போதே இந்த ஒலியும் இருந்திருக்கின்றது. இந்த ஒலி "ஆ..." "ஊ..." "ம்..." ஆகிய சப்தங்களை உள்ளடக்கியது...

ஒரு மலை உச்சியில் சென்று அங்கு ஏற்படும் சப்தத்தை உன்னிப்பாக கவனித்தால் "ஓம்" என்ற ஒலி-யை கேட்கமுடியும்... அதே போல கடல் அலைகளால் ஏற்படும் சப்தத்தை கேட்டாலும் "ஓம்" என்ற ஒலி ஏற்படுவதை கேட்க முடியும்.

ஓம் என்ற ஒலி-யை உச்சரிப்பது மூன்று நிலை பிரணாயாமா செய்வதற்கு ஒப்பாகும்...
"ஆ..." என்னும் சப்தம் நாம் ஏற்படுத்தும்போது நம் வயிற்று பகுதியில் நல்ல புத்துணர்வை ஏற்படுத்துவதை உணரலாம்... "ஊ..." என்னும் சப்தம் நாம் ஏற்படுத்தும்போது நம் மார்பு பகுதியில் நல்ல புத்துணர்வை ஏற்படுத்துவதை உணரலாம்...
"ம்..." என்னும் சப்தம் நாம் ஏற்படுத்தும்போது நம் உடம்பின் மேல் பகுதியில் நல்ல புத்துணர்வை ஏற்படுத்துவதை உணரலாம்.

Thursday, December 16, 2010

கேள்வி: உண்மையான பக்தனாக மாறுவது எப்படி...?

குருஜி-யின் பதில்: "நான் ஒரு உண்மையான பக்தன்" என்று முதலில் நினைத்துகொள்ள வேண்டும். "நான் பக்தர்களில் முதன்மையானவன், என்னை போல் யாரும் இல்லை" என்ற உணர்வு வேண்டும். இன்னார் முதன்மையானவர்... எனக்கு இரண்டாமிடம் தான்... என்று நினைக்க வேண்டாம். ஒவ்வொருவரும் "நான் தான் பக்தர்களில் முதன்மையானவன்... என்னை போல் பக்தியில் சிறந்தவன் யாரும் இல்லை" என்ற உணர்வு ஒவ்வொருவருக்குள்ளும் இருத்தல் அவசியம்...

நான் இரண்டாமிடத்தில் உள்ளேன், மூன்றாம் இடத்தில உள்ளேன்... பத்தாம் இடத்தில உள்ளேன் என்று நினைத்தால்... நீங்கள் நினைக்கின்ற அளவு ஞானத்தில் இருந்து விலகி இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்... இந்த பிரச்சனை பலருக்கும் உள்ளது... முதலில் வாழும் கலை அடிப்படை பயிற்சியை முடித்தபின் சில நாட்கள் கடை பிடித்து... பின் விட்டுவிடுவீர்கள்... மீண்டும் தொடர நினைக்கும்போது மிகவும் சிரமமாக இருக்கும். ஒரு முதுநிலை பயிற்சியில் கலந்துகொண்ட பின், மீண்டும் நம்மை இந்த ஞான பாதையில் இப்பயிற்சி அழைதுவருவதை உணர்வீர்கள்.

கேள்வி: பெண்களை பார்த்தால் என்னுள் காம உணர்வுகள் அதிகரிக்கின்றன... புனிதமான இடங்களில் கூட, தங்களின் முன்னிலையிலும் கூட... இதிலிருந்து விடுபடுவது எப்படி?

குருஜி-யின் பதில்: அது தானாக மறைந்துவிடும். உங்களுக்கு போதுமான வேலை இல்லாத பொழுது இம்மாதிரியான எண்ணங்களில் நாட்டம் அதிகரிக்கும். மேலும் குழந்தை பருவத்தில் ஏற்பட்ட பதிவுகளின் காரணத்தினாலும்... அல்லது முற்ப்பிறவியில் ஏற்பட்ட பதிவுகளின் காரணத்தினாலும் இருக்க வாய்ப்புள்ளது.

ஒரு தீ பிடித்து எரியும் வீட்டிற்க்குள் நீங்கள் சிக்கி விட்டீர்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள்... அப்பொழுது... நீங்கள் தப்பிப்பதற்கு முயல்வீர்களா... இல்லை நீங்கள் விரும்பும் பெண்ணை நினைத்துபார்த்து ரசித்துக்கொண்டிருப்பீர்களா...? உயிர் வாழ வேண்டும் என்ற ஆசையாலும்... உள்ளே இருந்தால் பாதிப்பு உண்டாகும் என்ற பயத்தினால் தப்பிபதற்கு முயல்வீர்கள்... ஆக பயமும், ஆசையும் ஒரு வகையில் நல்லதே... பயத்தையும், ஆசையையும் புத்திசாலித்தனமாக உபயோகப்படுத்தி நம்மிடம் உள்ள தீய பழக்கங்களில் இருந்து விடுபடவேண்டும்...

உதாரணமாக உங்களுக்கு மது பழக்கம் அல்லது புகை பிடிக்கும் பழக்கம் உள்ளதென்றால்... இவற்றை உபயோகித்தால் பெரிய இழப்பு (பண வகையிலோ, குண வகையிலோ, ஆரோக்ய வகையிலோ) நேரிடும் என உங்களுக்கு நீங்களே கூறிக்கொள்ளலாம்.

பயமும் மிக முக்கியமானது... பயம் இல்லாவிட்டால் மக்கள் தாங்கள் விரும்பும் வண்ணம் எதைவேண்டுமானாலும் செய்ய துவங்கிவிடுவார்கள்... போக்குவரத்து சாலையில் எந்தப்பக்கம் வேண்டுமானாலும் செல்ல துவங்கிவிடுவார்கள்... ஒரு ஒழுக்க கட்டுபாட்டை கடைபிடிக்க பயம் அவசியம்.

Wednesday, December 15, 2010

கேள்வி: எல்லாமே மாறிக்கொண்டு இருக்கிறதென்றால், தன் நிலை மாறாமல்... நிலையாக இருப்பவை... எவை... என்ன?

குருஜி-யின் பதில்: "எல்லாமே நிலையற்றவை"... இது தான் நாம் உணர்ந்த உண்மை... நிலையற்றவைகளை கண்டுகொள்வது மிக எளிமையானது. இந்த உண்மை மிகதெளிவாக புரியும்போது, மற்றொன்றையும் புரிவது அவசியம்... இந்த நிலையற்றவைகளை நடுநிலையாய் சுட்டி காட்ட ஒரு ஆதாரம் தேவை. ஒரு நடுநிலையான மாறாத ஆதாரம் இருந்தால் மட்டுமே மாறிகொண்டிருப்பவைகளை கண்டுணர முடியும். எல்லாமே மாறிகொண்டிருக்கிறது என்றால் அதை உணர்வதற்கு மாறாத ஒன்றின் உதவி இல்லாமல் அதை உணர முடியாது. எல்லாமே மாறுகின்றது என்பதை உணரும்போது, அப்படியே நம்முள் உள்நோக்கி பயணித்து பார்த்தோமேயானால் ஏதோ ஒன்று மிகவும் வேறுபட்டு... தனித்தன்மையாய்... அழகாய் மாறாமல் இருப்பது புரியும்... இது ஒரு மறைமுகமும் இல்லாத நேர்முகமும் இல்லாத ஒரு வித்யாசமான அனுபவம்... இதை தான் அத்வைத தத்துவத்தை உலகிற்கு வழங்கிய ஆதி சங்கரர் "அப்ரகோஷ-அநுபூதி" என்று குறிபிட்டுள்ளார். "ப்ரகோஷ" என்றால் "நேரடியான" (direct), "அநுபூதி" என்றால் "மறைமுகமான" (Indirect)... இந்த அனுபவம் நேரடியாகவும்... மறைமுகமாகவும்... அனுபவிக்க முடியாத ஒன்று...!!! இந்த ஷூட்சுமத்தை தவிர்க்கவோ.... தக்கவைத்துகொள்ளவோ... முடியாது...!!! இந்த அனுபவத்தை யாராலும் தவிர்க்கவும் முடியாது, தக்கவைத்துகொள்ளவும் முடியாது... இதுவே உண்மையான நுண்மையான புதிர், இது தான் நம் வாழ்க்கை.

வாழ்கையில் "நான் தூங்கியதே இல்லை" அல்லது "இது தான் தூக்கம்" என்று ஒருவராலும் சொல்ல இயலாது... இது நமக்கு நாமே தெரியாமல் அனுபவித்துகொண்டிருக்கும் அனுபவத்தின் ஒரு பகுதி. நம்மை... தூங்க வைக்கும்... தூக்கத்தில் இருக்கும்... தூக்கத்தில் இருந்து எழவைக்க கூடிய ஒன்று தான் நம்முடைய "மெய்/சுயம்/ஆன்மா" (Self). இது இன்னும் ஒரு பெரிய புதிர்... இது இல்லாமல் நாம் இருப்பது சாத்தியமற்றது. இது இல்லாமல் இருக்க கூடியது... ஆனால் உணரவோ... தெரிந்து கொள்ள முடியாத ஒன்று...

தூய ஞானத்தின் வாயிலாகவும்... அருளின் மூலமாகவும் அறிய முடியும்... இதை "மெய் ஞானம்" என்றழைப்பர் (Self Knowlege).

கேள்வி: இன்றைய இளைய சமூதாயத்தினர் (தங்கள் ஐய்ம்புலன்களால்) பல வழிகளில் ஈர்க்கப்படுகின்றனர், அவர்கள் நேரத்தை பயனுள்ள வழியில் செலவிட வாழும் கலையில் ஏதாவது உள்ளதா?

குருஜி-யின் பதில்: தலைமை ஏற்கக்கூடிய பண்பு, நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடிக்ககூடிய வழிமுறைகள் உள்ளடங்கிய ஆர்ட் எக்ஸ்செல் (ART EXCEL), மற்றும் YES , YES +, பயிற்சிகள் அவர்கள் நேரத்தை பயனுள்ள வழியில் செலவிட உதவும்.

இளைய சமூதாயத்தினர் பல வழிகளில் ஈர்க்கப்படுவதற்கான காரணம் அதில் கிட்டும் அற்ப சந்தோசத்திற்காக மட்டும் தான்...!!!

கேள்வி: நல்ல ஆசைகளையும், நல்லவை இல்லாத ஆசைகளையும் வேறுபடுத்தி பார்ப்பது எப்படி?

குருஜி-யின் பதில்: நீண்ட கால சந்தோசத்தை தந்து குறுகிய கால பிரச்சனைகள் தரக்குடியவை நல்லது.... நீண்ட கால பிரச்சனைகள் தந்து குறுகிய கால சந்தோசத்தை தரக்குடியவை தவிர்க்க வேண்டியது. இதயே வரைமுறையாக கடைபிடிப்பது நன்று.

கேள்வி: குருவானவர் எப்படி மனிதனை அவனின் இயல்பு நிலைக்கு மாற்றுகிறார்?

குருஜி-யின் பதில்: அவர் எந்த வித மாற்றத்தையும் கொண்டுவருவதில்லை... மனிதனின் இயல்பு நிலைக்கு அழைத்து வருகிறார்.

கேள்வி: ஆன்மீக பாதையில் முன்னேறி இருக்கிறோமா இல்லையா என்பதை எப்படி அறிந்துகொள்ள முடியும்?

குருஜி அவர்களின் பதில்: எப்பொழுதும் சந்தேகம் நல்ல விசயங்களின் மேல் தான் வரும்... உதாரணமாக - நீங்கள் மற்றவர்களின் அன்பின் மேல் சந்தேகம் கொள்வீர்கள், அனால் அவரின் கோபத்தின் மேல் சந்தேகமே படமாடீர்கள்... ஆக, நீங்கள் உங்கள் ஆன்மீக அனுபவத்தின் மேல் சந்தேகம் கொண்டால் அந்த அனுபவம் நிச்சயமாக "ஒரு நல்ல அனுபவமாகத்தான் இருக்க முடியும்"...!!!

ஆன்மீக பாதையில் எவ்வளவு முன்னேறி இருக்கிறோம் என்பதை நாமே அறிந்துகொள்ள கீழே உள்ளவைகளால் அறிய முடியும்:

# நமக்குள் கருணை அல்லது அரவணைக்கும் தன்மை வளர்ந்திருக்கிறதா இல்லையா...,

# நம்மை சுற்றி நடக்கும் செயல்கள்... அதில் இருந்து விடுபடும் தன்மை...,

# நம்மை சுற்றி இருக்கும் மனிதர்கள், நம்மை பாதிக்கும் செயல்கள்... அதில் இருந்து விடுபட்டு எவ்வளவு வேகமாக நம் இயல்பான நிலைக்கு திரும்பும் மனோபாவம்...

இவற்றை எல்லாம் வைத்து நாம் ஆன்மீக பாதையில் எவ்வளவு முன்னேறி இருக்கிறோம் என்பதை நாமே அறிந்துகொள்ள முடியும்...!!!

எப்பொழுதும் நம்முடைய முன்னேற்றத்தை பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கதேவை இல்லை... ஒரே நேரத்தில் மாணவனாகவும் ஆசிரியனாகவும் இருக்க முடியாது...!!!

Saturday, August 1, 2009

நிங்களும் ஓர் சாதனையாளர் ஆகலாம்...?

அந்த குழந்தை பிறந்த பொழுது, அந்த குழந்தையின் தந்தை காலமாகி மூன்று மாதமாகி இருந்தது... குறை மாதத்தில் பிறந்ததால் உடல் வளர்ச்சியும், மூளை வளர்ச்சி குன்றி காணப்பட்டான்... நாம் குளிப்பதற்கு உபயோகப்படுத்தும் குவளையில் அடங்கிவிடும் அளவே அந்த குழந்தை இருந்தான்...

சிறு வயதில் படிப்பு வராததின் காரணமாக அவனது தாய், அவனுடைய பதினைந்தாவது வயதில் விவசாயம் பார்க்க அனுப்பி வைத்தாள்... வேண்டா வெறுப்பாக அவன் அந்த வேலையில் ஈடுபட்டான்... ஒரு நாள் அவனுடைய மூத்த ஆசிரியர் அவனை மீண்டும் கல்வி கற்க வற்புறுத்தி, கல்வியை தொடரசெய்தார். அவனுடைய பத்தொன்பதாவது வயதில் ஒரு பெண்ணை காதலித்தான், படிப்பிலும் ஆர்வமும் மிகுந்தது... படிப்பில் கவனம் செலுத்தியவுடன் காதல் கசிந்து அந்த பெண் வேறு ஒருவருடன் மணமுடிக்கபட்டாள்... அதற்கு பின் அவன் திருமணமே செய்துகொள்ளவில்லை...

அதிருஷ்டமே இல்லாமல், வாழ்கை வாழ்வதற்கே தடுமாற்றத்துடன், படிப்பில் முழுமை பெறாமல் திண்டாடிய அந்த சிறுவன் என்ன சாதித்திருக்க முடியும்...

பின்னாளில்...

# உலகின் புவியீர்ப்பு (Universal Gravity) சக்திதனை உலகிற்கு விவரித்தார் ...

# மூன்று இயக்க விதிகளை (Three Laws of Motion) படைத்தார் ...

# பிரதிபலிக்கும் தொலை நோக்காடியை (Reflecting Telescope) கண்டுபிடித்தார் ...

# கணித சாஸ்த்ரதிற்கு பல்வேறு பங்களிப்பு அளித்துள்ளார்...

அவர் வேறு யாருமல்ல...

சர். ஐசாக் நியூட்டன் அவர்கள்...

எதிர் மறையான சூழ்நிலையை கண்டு அவர் ஒதுங்கிவிடவில்லை... எல்லா சூழ்நிலைகளையும் இன்முகத்துடன் எதிர்கொண்டு கடந்து சென்றார்...!!!

நாமும் வாழ்வில் எதிர் மறையான சூழ்நிலையை இன்முகத்துடன் எதிர்கொண்டு கடந்து சென்றால் வாழ்வில் நாமும் ஓர் சாதனையாளர் ஆகலாம்...!!!

Wednesday, January 21, 2009

வாய்மை - நல்ல உணர்வுகளின், நல்ல எண்ணங்களின் வெளிப்பாடு...

புறம்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மை
வாய்மையான் காணப் படும்" - திருக்குறள்

உடலினது தூய்மை நீரினால் அமையும்... உள்ளத்தினுடைய தூய்மை வாய்மை என்னும் நற்பண்பினால் அமையும்...

வாய்மை என்பது வெறும் செயல் மட்டுமல்ல... நல்ல உணர்வுகளின், நல்ல எண்ணங்களின் வெளிப்பாடு... உணர்வுகளும், எண்ணங்களும் நமது உள்ளத்திலிருந்து தான் வெளிப்படுகின்றது... உள்ளத்தை தூய்மையாக வைத்துக்கொண்டால், அதன் பிரதிபலிப்பு நமது உணர்வுகளிலும், எண்ணங்களிலும் காண முடியும்...

உள்ளத்தை தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு மிகச்சிறந்த வழி தான் 'தியானம்'... தியானத்தின் மூலம் வாய்மை எனும் நல்ல பண்பினை அடைய முடியும்.

Wednesday, January 14, 2009

மூச்சின் ரகசியம் உங்களுக்குத்தெரியுமா...?

நம் உடலில் இருந்து வெளியேற கூடிய (80-90) சதவிகித நச்சு கழிவுகள் நம் மூச்சின் மூலம் வெளியேறுகின்றது...(மல ஜலம் மூலம் வெளியேறக்கூடிய நச்சு கழிவுகள் வெறும் 10-20 சதவிகிதம் மட்டுமே..)

சராசரி மனிதர்கள் தம் நுரையீரலை முழுமையாக உபயோகிப்பதில்லை... சராசரி மனிதர்கள் தம் நுரையீரலின் கொள் அளவில் 30 சதவிகிதமே உபயோகிக்கிறார்கள்... சுவாசத்தை சரிபடுத்துவத்தின் மூலம் நாம் நம் நுரையீரலின் கொள் அளவை அதிகப்படுத்தமுடியும்...நுரையீரலின் கொள் அளவை அதிகப்படுதுவத்தின் மூலம் நாம் நம் உடலில் இருக்கும் நச்சு கழிவுகளை முழுமையாக வெளியேற்ற முடியும்...


வாழும் கலை பயிற்சியில் பல நுணுக்கமான மூச்சு பயிற்சிகள் கற்றுகொடுக்கப்படுகின்றது... பயிற்சியில் சேர்ந்து பயன் பெறுங்கள்...

சென்ற வார சத்சங்கத்தில்...

சென்ற வார சத்சங்கத்தில் குருஜியிடம் சிலர் கேள்வி கேட்டனர்... குருஜியின் பதில்களில் சிலவற்றின் தமிழாக்கம்...


(இந்த வாரம் ஆசிரியர் பயிற்சி நிறைவு பெற்றதால் ஆசிரியர் சம்பந்தமான கேள்வி ஒன்றை ஒருவர் கேட்டார்)


கேள்வி : ஒரு நல்ல வாழும் கலை ஆசிரியரின் அடையாளங்கள் என்ன...?
குருஜியின் பதில் : ஒரு நல்ல ஆசிரியரின் அடையாளங்கள்.... (Humility) பணிவு, (Integrity) முழுமை/நேர்மை/வாய்மை, (Compassion)அரவணைக்கும் தன்மை... இம்மூன்று குணங்கள் இருத்தல் அவசியம்


இந்த குணங்கள் ஆசிரியருக்கு மட்டுமல்ல... ஒவ்வொரு மனிதனிடமும் இருத்தல் அவசியம்... இந்த குணங்கள் எல்ல மனிதர்களிடம் மறைந்துள்ள இயல்பான குணங்கள்... அதை அனைவருக்கும் உணரவைத்தல் அவசியம்... இப்பொழுதுள்ள காலகட்டத்தில் நாம் இதை ஒரு சவாலாக ஏற்று அனைத்து மக்களிடமும் உணர்த்த நாம் பாடுபட வேண்டும்.


கேள்வி : குருஜி, ஆன்மீகத்திற்கும்... செழிப்பான வாழ்வு... இரண்டில் எதை தேர்ந்தெடுப்பது..? (I am in crossroads between Spirituality and Prosperity)
குருஜியின் பதில் : ஆன்மீகம் செழிப்பான வாழ்விற்கு எதிரானது அல்ல... அதேபோல் செழிப்பான வாழ்வு ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல... ஆன்மீக உணர்வு இல்லாத செழிப்பான வாழ்வு நம்மை தாழ்வு நிலைக்கு தள்ளிவிடும்...


பல மனிதர்கள், நிறுவனங்கள் நன்னெறிகள் இல்லாமல் செழிப்பை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்கியவர்கள் தாழ்வு நிலையை அடைந்ததை கண்கூடாக நாம் கண்டுள்ளோம்... ஆக ஆன்மீகம் கலந்த செழிப்பான வாழ்வு மேன்மையுடையது. செழிப்பு என்பது பொன் பொருள் மட்டுமல்ல... நன்னெறிகளும் தான்...

Monday, January 5, 2009

இன்றைய கல்வி முறை...

நம் நாடு ஆன்மீகத்தில் சிறந்தது என்று கூற கேட்டிருக்கின்றோம்... ஆன்மிகம் என்றால் கோவிலுக்கு செல்வது... விரதம் இருப்பது... நல்ல பக்திப்பாடல்கள் கேட்பது என்ற வெளிப்படையான செயல்களில் தான் காண முடிகிறது. இவை மட்டும் தானா ஆன்மிகம்...?

இதோ நம் நாட்டையும் நாட்டில்லுள்ள மக்களையும் மக்களின் தன்மையையும் பற்றி ஒரு ஆங்கிலேயனின் அறிக்கை...



"நான் இந்தியாவில் எல்லா இடங்களுக்கும் சென்று வந்தேன்... அங்கு ஒரு பிச்சைக்கரானையோ, திருடனையோ நான் பார்க்க முடியவில்லை, அபரிமிதாமான செல்வத்தையும், மிக உயர்ந்த கொள்கைகளுடைய மக்களை காண முடிந்தது. இப்படிப்பட்ட மக்களை உடைய இந்தியாவை நாம் கவரவேண்டுமென்றால், இந்நாட்டின் முதுகெலும்பாகிய ஆன்மீகத்தையும், உயரிய பண்பாட்டையும் உடைத்தெறிய வேண்டும், மேலும் அவர்களுடைய பழமையான பாரம்பரியமிக்க கல்விமுறையை மாற்றி... ஆங்கிலமும், அந்நிய தேசமும் உயர்ந்தது, சிறந்தது என்று மக்களை நம்பும்படியாக செய்வதின் மூலம் நாம் அவர்களை நாம் விரும்பும் வண்ணம் அவர்களை ஆட்டுவிக்க முடியும்." இவ்வாறு இந்த அறிக்கை ஆங்கில அரசிடம் சமர்பிக்கபட்டது, சமர்பித்தவர் "லார்ட் மெக்காலே"... இவர் வடிவமைத்த கல்வி முறையை தான் நாமும் நம் மக்களும் கற்றுகொண்டிருக்கின்றோம்...

இதனால் பாதிக்கப்பட்டது நாமும் நம் நாட்டு மக்களும் தான்... இன்றைய சமூக சீர்கேடுகளுக்கு காரணம் நம் நாட்டின் பண்பாட்டை நம் சமூகத்திலிருக்கும் மக்களுக்கு கொண்டு சேர்க்காததுதான், ஆக நாம் செய்யவேண்டியதெல்லாம், இந்த அற்புதாமான கல்விதனை நம் மக்கள் அனைவருக்கும் கொண்டு செல்லவேண்டும்.

"பாருக்குள்ளே நல்ல நாடு... எங்கள் பாரத நாடு..." என்னும் பாரதியின் பாடல் வரிகளுக்கேற்ப, நம் நாடு சிறந்து விளங்க வேண்டும்... அதற்காக நாம் தினமும் சில மணி நேரங்கள் செலவிட வேண்டும்...

பழைமையான கல்வி முறையில் உடல் ஆரோக்கியம் இருந்தது, கல்வியினால் மனம் பண்பட்டது, உயர்ந்த சிந்தனை இருந்தது... அதை நாம் மறந்துவிட்டோம். இந்த அற்புதமான கல்வி முறையை நாம் வாழ்வில் கடைபிடிக்க அற்புதமான வழியை நமக்காக (அந்தந்த வயதினற்கு ஏற்றபடி கல்வி முறையை) வடிவமைத்துள்ளார் பூஜ்ய குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள். நம் நாட்டின் ஆன்மீகத்தையும், பண்பாடையும் மீண்டும் மக்களின் மனதில் உயிர்தழ செய்வதே நம் ஒவ்வொருவரின் நோக்கமாக இருத்தல் வேண்டும்.

குறிப்பு:
சமீபத்தில் நான் ஒரு கல்லூரி மாணவனின் வாகனத்தில் கண்ட வாசகம் ...
"Born Intelligent, Ruined by Education"
(புத்திசாலியாய் பிறந்தேன், கல்வி அதை பாழக்கியது...)

Wednesday, December 17, 2008

வாழும் கலையா... அப்படின்னா என்னங்க...?

அளவில்லா அன்பரே,

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் உள்ள ஒற்றுமை... நாம் அனைவரும் அன்புடன் இருக்கதெரிந்தவர்கள், சிந்திக்க தெரிந்தவர்கள், அனைத்து ஜீவராசிகளையும் அரவணைக்க தெரிந்தவர்கள்... இப்படி பல அற்புதமான தன்மைகளை கொண்ட மனிதனாக பிறந்ததற்கு முதலில் பெருமை கொள்வோம்.

நாம் எந்த நாட்டை சார்ந்தவரனாலும், எந்த மதத்தை சார்ந்தவரனாலும், எந்த நிறத்தை சார்ந்தவரனாலும், எந்த ஜாதியை சார்ந்தவரனாலும், ஆத்திகரனாலும், நாத்திகரனாலும் இந்த அற்புதமான குணங்கள் நம்மிடமே உள்ளதென்பது எல்லாரும் அறிந்த உண்மை.

இப்படி இருந்தும் இன்றைய உலகில் மதம், நிறம், ஜாதி, குழுக்கள், அரசியல் ஆகிய பெயர்களால் பலவிதமான கலவரங்கள் உருவாகிரதென்பது நாம் அறிந்த ஒன்று. நாம் வாழக்கூடிய இன்றைய காலங்களிலேயே இப்படி என்றால்... நம்முடைய வருங்கால சந்ததியினரின் காலங்களை நினைத்துபாருங்கள்...

இப்படிப்பட்ட கலவரங்கள் வராமல் தடுக்க என்ன வழி...?

இத்தகைய கலவரங்களை வராமல் பாதுகாக்க மிகச்சிறந்த வழி ஒன்று உண்டு தெரியுமா... அதுதான் "ஆன்மீகம்" - அல்லது - "மனிதனை பண்படுத்தகூடிய வாழ்கை கல்வி".

பலர் மதமும் ஆன்மீகமும் ஒன்று என நினைப்பார்கள், ஆனால் இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. "மதம்" என்பது வாழைபழதோல், "ஆன்மீகம்" என்பது வாழைச்சுளை. எல்ல மதத்திலும் ஆன்மீகம் உண்டு, அதை விட்டுவிட்டு நாம் சடங்குகள் சம்பிரதாயங்களில் மட்டும் முக்கியத்துவம் கொடுக்கின்றோம். இதனால் ஆன்மீகம் தரும் கல்விதனை இழந்து இருக்கிறோம். இன்றைக்கு, தனி மனித பிரச்சனைகளில் தோன்றி... குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் முதல் உலகப்பிரச்சனைகள் வரை அனைத்திற்கும் ஒரே தீர்வை தருவது ஆன்மீக கல்வி மட்டுமே.

இதற்காக தனித்தன்மையுடன் வடிவமைத்திருக்க கூடிய பயிற்சி தான் வாழும் கலை. மனிதனின் ஒவ்வொரு நிலைகளையும் (உடல், மூச்சு, மனம், புத்தி, நினைவாற்றல்) இப்பயிற்சி மூலம் தூய்மைபடுத்தி, ஆன்மீக நெறிகளை வாழ்வில் கடைபிடிக்க மிக எளிமையான முறையில் வடிவமைக்கபட்டுள்ளது.

இப்பயிற்சியின் நோக்கமே தனி மனிதனை திடப்படுத்துவது, தனி மனிதனை திடப்படுத்துவத்தின் மூலம் சமூதாயத்தை திடப்படுத்துவது, சமுதாயத்தை திடப்படுத்துவத்தின் மூலம் ஒரு மிகச்சிறந்த தெய்வீகமான உலகத்தை உருவாக்குவதே இப்பயிற்சியின் சிறப்பம்சமாகும்.
மனிதனை மனிதனாக வாழவைப்பது வருமானக்கல்வி மட்டுமல்ல வாழ்கை கல்வியும்தான். இந்த அற்புதமான வாழ்கை கல்வியை அனைவரும் கற்றிட அன்புடன் அழைக்கிறோம்.

சிந்திப்போம் செயல்படுவோம்.

ஆரோக்கியம் என்பது...!!!

 

ஆரோக்கியம் என்பது...

நோயில்லாத உடல்...
நடுக்கமில்லாத மூச்சு...
இறுக்கம் இல்லாத மனது...
செயல் தயக்கம் இல்லாத புத்தி...
அலைகழிக்க பெறாத நினைவாற்றல்...
இவை அனைத்தும் கலந்த தன்னலம்...
வேதனை இல்லாத ஆன்மா...

குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள்
- வாழும் கலை நிறுவனர்

அறிமுகம்

ஜெய் குருதேவ்...!!!

இந்த அற்புதமான வாழும் கலை ஞானத்தை தமிழில் வழங்குவதற்கு உள்ளார்வதை ஏற்படுத்திய குருஜி அவர்களுக்கு என் மனம்நிறைந்த வந்தனங்கள்...

"குரு ப்ஹ்ரமா குரு விஷ்ணு குரு தேவோ மகேஷ்வரஹ ... குரு க்ஷாக்க்ஷாத் பரப்ஹ்ரமா தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ..."

அன்புடன்
பத்மநாபன்